பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் நியூசிலாந்து 309 ரன்கள் குவிப்பு - கான்வே சதம் அடித்து அசத்தல்..!

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கராச்சியில் தொடங்கியது.

Update: 2023-01-02 17:51 GMT

Image Courtesy: AFP 

கராச்சி,

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம், நவுமன் அலி ஆகியோருக்கு பதில் ஹசன் அலி, நசீம் ஷா இடம் பெற்றனர்.

நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னருக்கு பதில் மேட் ஹென்றி இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். டாம் லாதம் - கான்வே ஜோடி சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர். அணியில் ஸ்கோர் 134 ரன்கள் இருந்த போது லாதம் அவுட் ஆனார்.

இதனையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கான்வே சதம் அடித்து அசத்தினார். அவர் 122 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே வில்லியம்சனும் அவுட் ஆனார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் 26 ரன்னிலும், மிட்செல் 3 ரன்னிலும், பிரேஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளையும் நிஷம் ஷா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2வது நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்