பி.சி.சி.ஐ. அதனை செய்தால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயார் - கம்பீர் நிபந்தனை

இந்திய அணியின் முன்னாள் வீரரான கம்பீரிடம் அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-26 04:19 GMT

புதுடெல்லி,

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. இப்போதே தொடங்கி உள்ளது. இதற்காக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது.

அந்த வகையில் பி.சி.சி.ஐ. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு கவுதம் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பேச்சு வார்த்தையில் கவுதம் கம்பீர், தனக்குதான் அந்த பதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தயார் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்திய முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது கொல்கத்தா அணிக்காக ஆலோசராக செயல்பட்டு வரும் வேளையில் இந்த தொடரில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோன்று கடந்த இரு ஆண்டுகளாக லக்னோ அணியின் மென்டராக இருந்தபோது அந்த அணி பிளே ஆப் சுற்றிற்கு நுழைந்தது. இதனை கணக்கில் கொண்டே அவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. மும்மரம் காட்டி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்