முதல் ஒருநாள் போட்டி; பதும் நிசாங்கா இரட்டை சதம் - இலங்கை 381 ரன்கள் குவிப்பு
இலங்கை அணி தரப்பில் பதும் நிசாங்கா 210 ரன்கள் அடித்தார்.;
Image Courtesy: AFP
பல்லேகலே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வென்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் பல்லேகலேவில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்ணாண்டோ களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் பென்ணாண்டோ 88 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 16 ரன், சமரவிக்ரமா 45 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து அசலங்கா களம் இறங்கினார். ஒரு புறம் நிலைத்து நின்று ஆடிய நிசாங்கா ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா 136 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 381 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் நிசாங்கா 210 ரன்கள் அடித்தார். இதையடுத்து 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆட உள்ளது.