விராட் கோலி விஷயத்தில் பெரிய தவறு செய்துவிட்டேன்: டி வில்லியர்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் விலகலுக்கான காரணம் குறித்து டி வில்லியர்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Update: 2024-02-09 06:06 GMT

image courtesy;AFP

கேப்டவுன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்றாக வெற்றி பெற்ற நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக இந்த 2 போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இடம்பெற்றிருந்தார். இருப்பினும் இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.

அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விலகி இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்து இருந்தாலும் குறிப்பிட்ட காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. இந்நிலையில் விராட் கோலி 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே விராட் கோலியின் திடீர் விலகலுக்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், விராட் கோலியின் நண்பருமான டி வில்லியர்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது. இதன் காரணமாகவே விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் விராட் கோலியோ, அனுஷ்கா சர்மாவோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலி விஷயத்தில் தான் பெரிய தவறு செய்துவிட்டதாக புதிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,' நான் பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டேன். விராட் கோலி குறித்து கூறிய தகவல் உண்மையல்ல. விராட் கோலியின் விலகலுக்கான காரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவரது உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உலகமே விராட் கோலியின் கிரிக்கெட்டை பின் தொடர்கிறது. அவரின் விலகலுக்கு காரணம் என்னவாக இருந்தாலும், நிச்சயம் அவர் சிறந்த கம்பேக்கை கொடுப்பார்' என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்