டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு பாகிஸ்தான் தொடரை விட ஐ.பி.எல். சிறந்தது - மைக்கேல் வாகன்

ஐபிஎல் தொடருக்கு நிகரான தரம் பாகிஸ்தான் அணியிடம் இல்லை என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-26 08:21 GMT

லண்டன்,

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. விரைவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து தொடரில் 1 - 0 (4) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முன்னதாக இந்தத் தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறினார்கள். குறிப்பாக ஜோஸ் பட்லர், மொயின் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜேக்ஸ் போன்ற வீரர்கள் வெளியேறியது ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் ஒன்றும் முழுமையாக விளையாடுங்கள் இல்லையெனில் ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என்று இர்பான் பதான் கடுமையாக விமர்சித்தார். அதேபோல முழுமையாக விளையாடுவதாக சொல்லி விட்டு பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சுனில் காவாஸ்கர் விமர்சித்திருந்தார். இருப்பினும் நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு நிகரான தரம் பாகிஸ்தான் அணியிடம் இல்லை என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனவே பில் சால்ட் போன்ற வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து வாரியம் அனுமதித்திருக்க வேண்டும் என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"தங்களது அனைத்து வீரர்களையும் திரும்ப அழைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது என்று நினைக்கிறேன். வில் ஜேக்ஸ், பில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அங்கே அழுத்தம், அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம், எதிர்பார்ப்பு ஆகியவை இருக்கும். எனவே அங்கு விளையாடுவது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடுவதை விட சிறந்ததாக இருக்கும் என்று நான் வாதிடுவேன்.

நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் ஐபிஎல் தொடர் அதிகப்படியான அழுத்தத்தை காட்டுகிறது. அங்கே ரசிகர்களின் அதிகப்படியான அழுத்தம், உரிமையாளர்கள், சமூக வலைதளம் போன்றவற்றுக்குள் வீரர்கள் தள்ளப்படுகின்றனர். இங்கே நான் பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து அணியை அவமரியாதை செய்யவில்லை. அவர்கள் ஒன்றாக டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடவில்லை. ஆனால் இங்கிருக்கும் தரத்தை விட ஐபிஎல் சிறந்தது என்று நான் சொல்வேன்" எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்