மும்பை வெற்றி பெறுவதற்கு இதை செய்ய வேண்டும் - பிரையன் லாரா அறிவுரை

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-16 10:48 GMT

Image Courtesy: AFP  

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். மும்பை அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

பாண்ட்யா தலைமையில் மும்பை அணி இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில் 2 வெற்றி 4 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக நியமித்ததற்கு அந்த அணி ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணிக்கு எதிராக கடந்த 14ம் தேதி சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முப்பை அணி தோல்வியை தழுவியது. அந்த அணியில் பும்ராவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் மும்பை அணியின் பந்துவீச்சு துறை குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியதாவது,

நாம் மும்பை இந்தியன்ஸ் அணியை பார்க்க வேண்டும். இங்கே பலரும் அவர்களை கோப்பையை வெல்லக்கூடிய அணியாக வைத்திருக்கின்றனர். அதற்கான காரணம் என்னவெனில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்கின்றனர். கடந்த 2 போட்டியில் 230 ரன்கள் அடித்த அவர்கள் 196 ரன்களை வெறும் 15 ஓவரில் சேசிங் செய்து மிகவும் எளிதாக வென்றனர்.

அதனால் இந்த போட்டியில் (சென்னைக்கு எதிராக) அவர்கள் வெல்வார்கள் என்று நாம் கணித்தோம். ஆனால் அவர்களுடைய பவுலிங் சுமாராக உள்ளது. பும்ராவை தவிர்த்து இந்த பவுலிங் கூட்டணியில் யாருமே அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதை சி.எஸ்.கே பேட்ஸ்மேன்கள் எடுத்துக்கொண்டனர்.

சில டாட் பந்துகளை வீசி மும்பை அழுத்தம் கொடுக்கும் என்று நாம் நினைத்தோம். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. பாண்ட்யாவுக்கு மோசமான போட்டியாக அமைந்தது. கடைசிக்கட்ட ஓவர்களில் பந்து வீசிய அவருக்கு எதிராக (தோனி) மாஸ்டர் 3 சிக்ஸர்கள் அடித்தார். எனவே மும்பை வெற்றி பெறுவதற்கு 2 - 3 மேட்ச் வின்னிங் பவுலர்களை கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்