இலங்கை கேப்டனுக்கு தடை...ஐசிசி அதிரடி நடவடிக்கை - என்ன நடந்தது..?

இலங்கை அணி, அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது.

Update: 2024-02-25 10:14 GMT

Image Courtesy: AFP

துபாய்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 20 ஓவர்களில் 206 ரன் மட்டுமே எடுத்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இலங்கை பேட்டிங் செய்த போது கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் வீசிய புல் டாஸ் பந்து இடுப்பு உயரத்துக்கும் மேல் வந்தது. அப்படி பந்து வீசினால் நோ பால் ஆகும். ஆனால், அம்பயர் நோ பால் அறிவிக்கவில்லை.

இதனால் அம்பயர் தவறால் தோல்வி அடைந்ததாக கருதிய இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா, போட்டி முடிந்த உடன் பேசிய போது அம்பயர் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அம்பயரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதால் ஹசரங்காவுக்கு ஐசிசி விதிப்படி 3 டிமெரிட் புள்ளிகள் மற்றும் போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில் ஒரு வீரர் 5 குறைப்பாட்டுப் புள்ளிகளை பெற்றால் அந்த வீரருக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டி அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். கடந்த 24 மாதங்களில், இதற்குமுன் 2 டிமெரிட் புள்ளிகள் ஹசரங்காவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

24 மாதத்தில் 5 டிமெரிட் புள்ளிகளை பெற்றுவிட்டதால், ஹசரங்கா ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இலங்கை அணி, அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அத்தொடரில், வனிந்து ஹசரங்காவால் முதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்