டி20 உலகக்கோப்பை: விராட் கோலி அந்த இடத்தில் களமிறங்க வேண்டும்..? - பாண்டிங் கருத்து

விராட் கோலியை கழற்றி விடுவதற்கு பலரும் முயற்சிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Update: 2024-05-22 10:51 GMT

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக அந்த அணியில் டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைக்காது என்று பேசப்பட்டு வந்தது. வெஸ்ட் இண்டீசில் உள்ள பிட்சுகள் ஸ்லோவாக இருக்கும். எனவே அதில் நங்கூரமாக விளையாடக்கூடிய விராட் கோலியின் அணுகு முறை பொருந்தாது என்பதால் அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் காணப்பட்டன.

இருப்பினும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் எந்த இடத்தில் விளையாட வேண்டும்? என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளத்தில் நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் இந்தியாவில் வேண்டுமென்றே ஏதேனும் காரணத்தை சொல்லி விராட் கோலியை கழற்றி விடுவதற்கு பலரும் முயற்சிப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி போன்ற தரமான வீரர் டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத காரணத்தால் இந்திய தேர்வுக் குழுவினர் ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எனவே அவர்கள் ஜெய்ஸ்வாலை ஓப்பனிங்கில் களமிறக்கும் முடிவையும் எடுத்திருக்கலாம். ஆனால் ரோகித் சர்மாவுடன் அவர்கள் விராட் கோலியை ஓப்பனிங்கில் விளையாட வைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி பற்றி ஒரு வேடிக்கையான விஷயம் உள்ளது.

இந்தியாவில் உள்ள பலர் அவரை கழற்றி விடுவதற்காக ஒரு காரணத்தை தேடுகின்றனர். ஆனால் என்னை பொறுத்த வரை அவர்தான் இந்தியா தேர்வு செய்வதற்கான முதல் வீரர். அவர் டாப் ஆர்டரில் தன்னுடைய வேலையை செய்வார். அவரைச் சுற்றி நீங்கள் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா போன்ற அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடிய வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த வீரர்கள் அவர்களுடைய வழியில் விளையாடுவார்கள்.

ஐ.சி.சி. இணையத்தில் இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது பற்றி நான் ஏற்கனவே சில உரையாடல்களை பேசியுள்ளேன். பெரிய போட்டிகள் வரும்போது அவரை போன்ற வீரர்கள்தான் வேலையை செய்து முடிக்கக் கூடியவர்கள். கிளாஸ் மற்றும் அனுபவம் ஆகியவற்றை உங்களால் எதையும் வைத்து மாற்ற முடியாது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்