டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அமெரிக்கா செல்வது எப்போது..? வெளியான தகவல்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-05-24 10:25 GMT

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதவுள்ளன. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.

இதில் இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து 9-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஜூன் 15-ம் தேதி கனடா அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், சிராஜ் மற்றும் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க நாளை அமெரிக்காவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 26-ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் தவிர்த்து மற்ற வீரர்கள் நாளை அமெரிக்கா செல்ல உள்ளனர்.

சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோர் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்