ஆஸி. எதிரான டெஸ்ட் தொடர்; அது மட்டும் இல்லையென்றால் இது ரன் மழை பொழியக்கூடிய தொடராக இருக்கும் - அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-03-29 02:55 GMT

Photo Credit: ICC

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் - கவாஸ்கர் தொடர்) ஆட உள்ளது. பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்த முறை 5 ஆட்டங்கள் கொண்ட தொடராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பார்டர் - கவாஸ்கர் தொடரின் போட்டிகள் எந்தெந்த மைதானங்களில் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

2வது போட்டியான பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், 4வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்திலும், 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி சிட்னி மைதானத்திலும் தொடங்குகிறது.

இந்நிலையில் இம்முறை ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பசுமையாக இல்லையென்றால் இந்த தொடர் ரன் மழை பொழியக்கூடிய தொடராக இருக்கும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது,

பெர்த்தில் முதல் நாளில் பிட்ச் மெதுவாக இருக்கும். அதனாலேயே அங்கு ஆஸ்திரேலியா டாஸ் வென்று அனைத்து நேரமும் முதலில் பேட்டிங் செய்கிறது. ஆனால் தற்போது இந்திய வீரர்கள் வேகத்துக்கு எதிராக தடுமாறுவதில்லை. குறிப்பாக இம்முறை வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய அணியாக இந்தியா இருப்பதை உங்களால் கண்டறிய முடியாது.

அவர்கள் ஹெல்மெட்டில் சில அடி வாங்கலாம். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக தலையில் அடி வாங்கினாலும் அதை எதிர்கொள்ளும் வீரர்கள் எங்கள் அணியில் வந்துள்ளதை நான் பார்த்துள்ளேன். அதனாலயே இந்தியா வெளிநாடுகளில் நல்ல முடிவுகளையும் பெற்று வருகிறது.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நாங்கள் அரை அனுபவம் கொண்ட அணியுடன் விளையாடினோம். அங்கே முதல் போட்டியில் தோற்றாலும் இரண்டாவது போட்டியில் வென்றோம். மிகவும் கடினமான கிரிக்கெட்டை விளையாடக்கூடிய ஆஸ்திரேலியா இம்முறை எங்களை வீழ்த்த காத்திருப்பார்கள் என்பதை அறிவோம்.

மைதானத்தை நிரப்பும் ரசிகர்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் விளையாடும் அனைத்து தொடரும் ஆவலாக இருக்கும். இம்முறை வார்னருக்கு பதிலாக ஸ்மித் ஓப்பனிங்கில் களமிறங்குவது போல பேட்டிங் வரிசையில் சில மாற்றம் உள்ளது. ஆஸ்திரேலியாவிடம் கடந்த தசாப்தம் முழுவதும் அசத்தி வரும் நேதன் லயனுடன் 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

ஆனால் எங்கள் அணியில் சற்று அனுபவமின்மை இருக்கிறது. ஆனால் வேகத்தை எதிர்கொள்வதற்கான வீரர்கள் எங்களிடம் வந்துள்ளதாக நினைக்கிறேன். இந்த முறை ஆடுகளங்கள் பசுமையாக இல்லையென்றால் இது ரன் மழை பொழியக்கூடிய தொடராக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்