உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி - விராட் கோலி உருக்கம்

கோப்பையை வெல்லாவிட்டாலும் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை எப்போதும் மறக்க முடியாது என்று விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-23 09:04 GMT

பெங்களூரு,

நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த அந்த அணி அதன்பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று அதிரடியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அதன் காரணமாக விராட் கோலியும் பெங்களூரு ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் இம்முறை கோப்பையை வெல்லாவிட்டாலும் தொடர்ந்து 6 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை எப்போதும் மறக்க முடியாது என்று விராட் கோலி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"இந்த வருடத்தின் முதல் பகுதியில் எங்களுடைய செயல்பாடுகள் சராசரிக்கும் குறைவாக இருந்தது. வீரர்களாக எங்களிடமுள்ள தரத்திற்கு நாங்கள் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. அதன் பின் சுயமரியாதைக்காக சுதந்திரமாக விளையாடிய எங்களுக்கு தன்னம்பிக்கை மீண்டும் வந்தது. அதனால் அனைத்தையும் திருப்பி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது உண்மையாகவே சிறப்பானது. அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.

கடைசியில் நாங்கள் எப்படி விளையாட விரும்பினோமோ அப்படி விளையாடினோம். ரசிகர்களின் ஆதரவு அலாதியானது. இந்த சீசன் சரியாக இருந்தது. வேறுபட்டதாக இல்லை. அதற்காக நாங்கள் எப்போதும் நன்றியுடன் இருப்போம். பெங்களூருவில் மட்டுமல்ல நாடு முழுவதும் நாங்கள் விளையாடிய இடங்களில் அவர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றியுடன் இருப்போம். உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்