உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்காளதேச அணியின் கேப்டன் விலகல்!
உலகக்கோப்பை தொடரில் வங்காளதேச அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது.;
image courtesy; ICC
புனே,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. மற்ற 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன.
இதில் வங்காளதேச அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 11ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின்போது அவருக்கு அவரது இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் சிகிச்சைக்காக இன்று தாயகம் திரும்ப உள்ளார்.