கோலி அசத்தல் சதம்... ராஜஸ்தான் அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

சிறப்பாக விளையாடிய விராட் கோலி நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

Update: 2024-04-06 15:43 GMT

image courtesy: twitter/@IPL

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடினர். இதனால் அணியின் ஸ்கோர் சற்று மெதுவாகவே உயர்ந்தது. போகப்போக அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினர்.

நடப்பு சீசனில் முதல் முறையாக 100 ரன்களை கடந்த இவர்களது பார்ட்னர்ஷிப் 125 ரன்களில் பிரிந்தது. டு பிளிஸ்சிஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமல்லாது நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட முதல் சதமாகவும் இது பதிவானது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்கள் குவித்து அசத்தினார். ராஜஸ்தான் தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்