மகளிர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா..? வங்காளதேசத்துடன் இன்று மோதல்
மற்றொரு அரையிறுதியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.;
image courtesy: twitter/@ACCMedia1
தம்புல்லா,
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் ஆகிய அணிகளை பந்தாடி ஏ பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. வங்காளதேசம் 'பி' பிரிவில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடத்தை பெற்று அரைஇறுதியை எட்டியது.
இரவு 7 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரைஇறுதியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.