துளிகள்

கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் 58 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றார்.

Update: 2017-03-04 20:32 GMT

சாக்ஷி மாலிக் வேதனை

* கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் 58 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்குக்கு ரூ.3½ கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவரது சொந்த மாநிலமான அரியானா அரசு அறிவித்தது. ஆனால் அந்த தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து சாக்ஷி மாலிக் தனது டுவிட்டர் பதிவில் ‘ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எனது வாக்குறுதியை நான் காப்பாற்றி விட்டேன். எனக்கு பரிசு அளிப்பதாக கூறிய அரியானா அரசு தனது வாக்குறுதியை எப்போது காப்பாற்ற போகிறது?. அரியானா அரசு அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஊடகங்களுக்காக மட்டும் தானா?’ என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா ஏமாற்றம்

* விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை–ஆந்திரா அணிகள் மோதிய லீக் ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆந்திரா அணி 38.1 ஓவர்களில் 188 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 4 மாதமாக ஆடாத இந்திய அணி வீரர் ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் மும்பை அணிக்காக களம் கண்டார். 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

சென்னையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

* சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்த கல்லூரி வளாகத்தில் இன்று முதல் 10–ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 10 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டு மோதுகின்றன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு கோப்பையுடன் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் போபண்ணா ஜோடி தோல்வி

* துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அங்கு நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா (இந்தியா)–மார்சின் மேட்கோவ்ஸ்கி (போலந்து) ஜோடி 6–4, 3–6, 3–10 என்ற செட் கணக்கில் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)–ஹோரியா டெகாவ் (ருமேனியா) இணையிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு சாம்பியன் பட்ட வாய்ப்பை நழுவ விட்டது.

மேலும் செய்திகள்