தீபாவின் அடுத்த இலக்குகள்...

இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் ஸ்டார் தீபா கர்மாகரிடம் ஒரு சுறுசுறு பேட்டி...

Update: 2017-04-22 07:20 GMT

சமீபத்தில் நீங்கள் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை நடியா கொமன்சியை சந்தித்தீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றி...?


அவரைச் சந்தித்தபோது என் உடம்பு நடுங்கியது. அவரைச் சந்தித்ததும், அருகே அமர்ந்து பேசியதும் கனவு போல இருந்தன. மறக்க முடியாத அனுபவம் அது. உலகில் அவரைப் போல இன்னொருவர் கிடையாது.

உங்களுக்குப் பிடித்த ஆண் ஜிம்னாஸ்டிக் வீரர் யார்? பொதுவாக விளையாட்டு வீரர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

ஆண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களில் எனக்குப் பிடித்தவர், கென்ஸோ ஷிராய். மிக இளம் வயதில் ஜிம்னாஸ்டிக்ஸில் பல புதிய அம்சங்களை வெளிப்படுத்தியவர் அவர். அவரது செயல்பாடு மிகத் துல்லியமாக இருக்கும். ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தளத்தில் அவர் தடுமாறியதும், பதக்கம் வெல்ல முடியாமல் போனதும் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தின. ஜிம்னாஸ்டிக்ஸ் தவிர பிற விளையாட்டுகளில் நான் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் உசைன் போல்ட் எனது அபிமான தடகள வீரர். அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது சாதாரண விஷயமில்லை.

பயிற்சியின்போது எது உங்களுக்கு அவசியம் இருந்தாக வேண்டும்?


எனது பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி கட்டாயம் உடன் இருந்தாக வேண்டும். அவரில்லாமல் நான் பயிற்சி செய்வதில்லை. ஒருமுறை அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டபோது 10 நாட்கள் அவரால் பயிற்சி கொடுக்க வர முடியவில்லை. அப்போது நான் தனியே பயிற்சி செய்தேன். அப்போது, முக்கியமான எதையோ நான் இழந்துவிட்டதைப் போலிருந்தது.

நீங்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆகியிராவிட்டால் என்னவாகி இருப்பீர்கள்? உங்களின் அடுத்த இலக்கு என்ன?

நான் எனது ஐந்தரை வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியைத் தொடங்கினேன். அன்றுமுதல் இன்றுவரை அது எனக்கு பிடித்த விளையாட்டாக இருக்கிறது. மான்ட்ரியாலில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பை குறிவைத்து தற்போது நான் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அதற்குப் பின், 2018-ல் காமன்வெல்த் போட்டியும், 2020-ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியும் என்னுடைய இலக்குகளாக இருக்கின்றன. 

மேலும் செய்திகள்