துளிகள்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் டோனி, விராட் கோலி, யுவராஜ்சிங் ஆகியோர் பாகிஸ்தான் வீரர் அசார் அலியின் இரண்டு மகன்களுடன் சிறிது நேரம் ஜாலியாக நேரத்தை செலவிட்டனர்.

Update: 2017-06-21 20:07 GMT

ஆசிய தடகளத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்

22–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வருகிற 6–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை நடக்கிறது. இதில் 44 நாடுகளை சேர்ந்த ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்வது சந்தேகமாகியுள்ளது. ஏனெனில் அவர்களுக்கு இன்னும் மத்திய அரசு ‘விசா’ வழங்கவில்லை. இது குறித்து இந்திய தடகள சங்க தலைவர் அடிலே சுமரிவாலா கூறும் போது, ‘ஒலிம்பிக் கமிட்டி நடைமுறைப்படி அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு அனுப்ப வேண்டியது கடமை. அதன்படி இந்த போட்டிக்கு பாகிஸ்தானையும் அழைத்து இருக்கிறோம். அவர்கள் தங்களது வீரர்களின் பட்டியலை பதிவு செய்ய தந்து உள்ளனர். அவர்களது பெயர் விவரம் மற்றும் பாஸ்போர்ட்டை மத்திய அரசுக்கு நாங்கள் அனுப்பியுள்ளோம். அரசின் ‘விசா’ அனுமதிக்காக காத்திருக்கிறோம்’ என்றார்.

இந்திய வீரர்களுக்கு அசார் அலி நன்றி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் டோனி, விராட் கோலி, யுவராஜ்சிங் ஆகியோர் பாகிஸ்தான் வீரர் அசார் அலியின் இரண்டு மகன்களுடன் சிறிது நேரம் ஜாலியாக நேரத்தை செலவிட்டனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ள அசார் அலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு நன்றி. இதனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்’ என்று கூறியுள்ளார். அசார் அலியின் இந்த பதிவுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோலிக்கு பிந்த்ரா அறிவுரை

பயிற்சியாளர் என்றால் கண்டிப்புடன் அப்படி...இப்படி என்று இருக்கத்தான் செய்வார்கள். அதற்கு ஏற்ப பழகிக்கொள்ள வேண்டும் என்ற தொனியில் இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான பிந்த்ரா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தவர் எனது பயிற்சியாளர் யுவே ரீஸ்டெரர் (ஜெர்மனி) தான். ஆனால் அவரை எனக்கு பிடிக்காது. என்றாலும் அவருடன் 20 ஆண்டுகள் இருந்துள்ளேன். அவர் எப்போதும் நான் விரும்பாத வி‌ஷயங்களை பற்றியே பேசுவார்’ என்று பிந்த்ரா கூறியுள்ளார்.

பெண்கள் பயிற்சி கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. கேப்டன் மிதாலி ராஜ் (85 ரன்), பூனம் ரவுத் (69 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 166 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ராஜேஷ்வரி கெய்க்வாட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 130 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து அணி அந்த இலக்கை 27.2 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்