ஸ்பெயின் பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

Update: 2018-05-13 21:00 GMT

பார்சிலோனா, 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5–வது சுற்றான ஸ்பெயினிஷ் கிராண்ட்பிரி பந்தயம் பார்சிலோனாவில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 309.952 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 35 நிமிடம் 29.972 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றதுடன் அதற்குரிய 25 புள்ளிகளையும் தட்டிச் சென்றார். இந்த சீசனில் அவரது 2–வது வெற்றி இதுவாகும். அவரை விட 20.593 வினாடி பின்தங்கிய பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2–வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) 3–வது இடத்தையும், செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 4–வது இடத்தையும் பிடித்தனர். போர்ஸ் இந்தியா வீரர் செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 9–வதாக வந்தார். விபத்து மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 வீரர்கள் இலக்கை நிறைவு செய்யவில்லை.

இதுவரை நடந்துள்ள 5 சுற்று முடிவில் ஹாமில்டன் 95 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 78 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் இருக்கிறார்கள். 6–வது சுற்று பந்தயம் மொனாக்கோவில் வருகிற 27–ந்தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்