பிற விளையாட்டு
அம்மா வழியில் அதிரடி

ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த ‘மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்’ என்ற தற்காப்புக்கலையில் இறங்கி சாதித்துக் கொண்டிருக்கிறார் கோமல் ராவ்.
கோமல் ராவ் இந்த போட்டியில் பங்கேற்று ஆணை வீழ்த்தி பட்டம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இவருடைய தாயார் சீமா ராவ், இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர் என்ற சிறப்பை பெற்றவர். தாயை போலவே தன்னம்பிக்கையும், வலிமையும் கொண்ட பெண்மணியாக உருவெடுத்திருக்கிறார், கோமல் ராவ். “எனக்கு என் தாயார்தான் முன்மாதிரியாக இருக்கிறார். எனது வலிமை அவரிடமிருந்து கிடைத்தது’’ என்கிறார். புரூஸ் லீ விரும்பி கற்ற இந்த அதிரடி தற்காப்பு கலையை தாய்-மகள் இருவருமே கற்றிருக்கிறார்கள். அதில் கோமல் ராவ் தன்னை வலுப்படுத்திக்கொண்டு போட்டியில் பங்கேற்று சாதனையையும் பதிவு செய்துவிட்டார். போட்டி அனுபவம் பற்றியும், தாயார் தனக்கு உந்து சக்தியாக விளங்குவது பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

கமாண்டோ பயிற்சியாளர் தோற்றத்தில் உங்கள் அம்மாவைப் பார்த்தபோது அந்த கணம், உங்களுக்குள் எத்தகைய உணர்வைத் தூண்டியது?

‘‘அப்போது எனக்கு 15 வயதிருக்கும். அது காவலர்களுக்கு பயிற்சியளிக்கும் இடம். அங்கு வீரர்களுக்கு கமாண்டோ உடையில் பயிற்சி அளித்தபோது என் அம்மாவுக்குள் மிளிர்ந்த கம்பீரமும் ஆளுமையும் என்னை வியக்க வைத்தது’’

அம்மாவின் அதிரடி பாதையில் செல்ல வேண்டும் என்று நினைத்தீர்களா?

‘‘நான் என் பெயருக்கேற்றார்போல மென்மையானவள். என் ஆர்வம் எல்லாம் புத்தகம் மீது மட்டுமே இருந்தது. எப்பொழுது என் அம்மாவின் வலிமையை நேரில் பார்த்தேனோ அன்றிலிருந்து என் விருப்பம் மாறியது. நானும் அவரைப்போலவே வலிமையும், கம்பீரமும் கொண்ட பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மேலும் உடல் அளவிலும் மனதளவிலும் வலிமையாகி கொள்வது எனது சுய பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று, எண்ணினேன். எனது விருப்பத்தை எனது அம்மாவிடம் சொன்னபோது அவர் ஆச்சரியத்திற்குள்ளானார்’’

உங்கள் ஆரம்பகால பயிற்சி எவ்வாறு இருந்தது?

‘‘உடலை மேம்படுத்துவது என்பது மெதுவான செயல்முறை. அது ஒரு தவம் போன்றது. அதற்கு மிகுந்த பொறுமையும் கடின பயிற்சியும் தேவை. ஆரம்பத்தில் எனது தாயாரின் கண்டிப்பான பயிற்சிகள் என்னை துவண்டுவிட செய்தன. நாளடைவில் உடற்பயிற்சிக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டேன். புதிய இலக்குகளை அடைய நான் என் உடலை வருத்தி உழைத்தேன். நான் பெற்ற பயிற்சிகள் என் தற்காப்புக்கு துணை நின்றன. ஒருமுறை என்னை பின் தொடர்ந்துவந்த வாலிபன் என்னிடம் அத்து மீறினான். அவனை ஓங்கி அறைந்துவிட்டேன். அந்த விஷயத்தை அம்மாவிடம் சொன்னேன். அவர், ‘‘திரும்பிச் சென்று பலமாக மூன்று முறை அடித்து விட்டு வா. அப்போதுதான் மீண்டும் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டான்’’ என்றார். மறுமுறை பார்த்தபோது அவனை விளாசிவிட்டேன். அவன் மிகவும் பயந்து போய்விட்டான். அதன்பிறகு பயிற்சியின் போது பலமுறை ஆண்களுடன் மோதியிருக்கிறேன்’’

ஆணுடன் மோதி வெற்றி பெற்ற அனுபவம் எப்படி இருந்தது?

‘‘முதலில் நான் ஒரு பெண்ணுடன் மோதுவதாக தான் இருந்தது. போட்டிக்கான கடைசி நாளில் அந்த பெண் விபத்தில் காயம் அடைந்ததால் ஆண் ஒருவருடன் மோத வேண்டியதாகி விட்டது. பெண்களின் உடல் வலுவிற்கும், ஆண்களின் உடல் வலுவிற்கும் பெருமளவு வித்தியாசம் உள்ளது. இருப்பினும் அந்த போட்டியில் துணிந்து பங்கேற்றேன். நான் போட்டிக்கான கூண்டில் ஏறியதும் கூடி யிருந்தவர்கள் என்னை வெகுவாக உற்சாக மூட்டினர். அது என் உத்வேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. அந்த ஆணுடன் போராடி வெற்றியும் பெற்றுவிட்டேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்த அற்புதமான போட்டி’’

போட்டியில் பங்கேற்றபோது எதிர்ப்புகளை எவ்வாறு சமாளித்தீர்கள்?

‘‘நீ மென்மையானவள். உன்னால் போட்டியிட முடியுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு நான் போட்டியின் மூலமே பதிலளித்தேன். பின்பு அவர்கள் மவுனமாகி விட்டார்கள். உண்மையில் என்னால் ஆணை அடித்து வீழ்த்த முடியும் என்று ஆரம்பத்தில் உறவினர்கள், நண்பர்கள் யாரும் நம்பவில்லை. என்னுடைய செயல்பாடுகளை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘முடிவு என்னவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதே பெரும் தவறு. ஆரம்பத்தில் வெற்றி அல்லது தோல்வியில் முடிவடையுமா என்று சிந்திக்கக்கூடாது. அதன் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். உங்களின் வெற்றி சரியான நேரத்தில் கிடைக்கும்’ என்று புரூஸ் லீ கூறியுள்ளார். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்’’

ஆண்களை போல பெண்களும் இந்த அதிரடி பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறார்களா? உங்களுடைய பயிற்சி முறை எப்படி இருக்கும்?

‘‘ஆண்களுக்கு இணையாக சிறுமிகளும், பெண்களும் சரி விகிதத்தில் இந்த தற்காப்பு கலையில் பங்கேற்கிறார்கள். நான் அவர்களுக்கு பயிற்சியளிக்கும்போது சுயபாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணரச்செய்வேன். பயிற்சிக்கு ஒழுக்கமே முதல் தேவை. ஒழுக்கத்தின் மூலமே சிறப்பான பயிற்சியை பெற முடியும். என்னிடம் 64 வயது நிரம்பிய பெண்மணி பயிற்சி பெற வந்தார். அவரை பார்த்தபோது சமூகத்தில் பெண் களின் பாதுகாப்பு எவ்வளவு கேள்விக்குறியான நிலையில் உள்ளது என்பதை உணர முடிந்தது. பயிற்சி முடிந்த பின்பு அந்த பெண்மணியின் கண்களில் பெருமிதத்தை காண முடிந்தது’’

பெண்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை?

‘‘பெண்கள் இயற்கையாகவே பல வேலைகளை திறம்பட கையாளும் திறன் படைத்தவர்கள். ஒரு பெண் எப்படி அலுவலகத்திற்கு சென்று வேலை பார்த்து விட்டு, வீட்டையும் கவனித்து குழந்தைகளையும், குடும்பத்தையும் பராமரிக்கிறாள் என்பதை கவனித்தாலே அவளின் தனித்திறன்கள் தெரியும்.’’

உங்கள் வாழ்க்கையில் சோதனையான காலகட்டம்?

‘‘இரண்டு வருடங்களுக்கு முன்பு என் கணுக்கால் கடும் பாதிப்புக்குள்ளானது. இரண்டு வாரங்கள் என்னால் படுக்கை அறையை விட்டு வெளியே கூட வர முடியவில்லை. அதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆனது. ஒருமுறை என் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைந்து விட்டது, அப்பொழுது நிறைய ரத்தப்போக்கு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர ஆறு மாத காலம் ஆகி விட்டது. காயங்களால் அவதிப்பட்ட காலங்கள் எனக்கு மிகவும் சவாலான காலங்கள்’’ என்கிறார்.