பிற விளையாட்டு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடந்து வருகிறது.
சாங்வான்,

இதில் நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அத்துடன் ஜூன் மாதம் நடந்த உலக கோப்பை ஜூனியர் போட்டியில் இதே பிரிவில் தான் படைத்து இருந்த உலக சாதனையையும் (243.7 புள்ளிகள்) சவுரப் சவுத்ரி தகர்த்து புதிய சாதனையை பதிவு செய்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவரான சவுரப் சவுத்ரி ஆசிய போட்டியிலும் தங்கம் வென்றது நினைவு கூரத்தக்கது. தென்கொரியா வீரர் லிம் ஹோஜின் (243.1 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா (218 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அர்ஜூன் சிங் சீமா, அன்மோல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1730 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. தென்கொரியா அணி (1,732 புள்ளிகள்) புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது.

இதே போல் ஜூனியர் ஆண்களுக்கான டிராப் அணிகள் பிரிவில் அமன் அலி எலாஹி, விவான் கபூர், மனவ்ஆதித்யா சிங் ரதோர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 348 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தில் உள்ளது.