உலக துப்பாக்கி சுடுதல் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்தது.

Update: 2018-09-13 22:30 GMT

சாங்வான், 

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம் கிடைத்தது.

உதய்வீர் சித்து தங்கம் வென்றார்

52–வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.

12–வது நாளான நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அமெரிக்க வீரர் ஹென்றி லிவெரெட் 584 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா வீரர் லீ ஜாக்யோன் 582 புள்ளிகள் திரட்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் விஜய்வீர் சித்து 581 புள்ளிகளுடன் 4–வது இடமும், ராஜ்கன்வார் சிங் சந்து 568 புள்ளிகளுடன் 20–வது இடமும் பிடித்தனர்.

அணிகள் பிரிவிலும் முதலிடம்

25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 1,730 புள்ளிகளுடன் சீனா அணி வெள்ளிப்பதக்கமும், 1,721 புள்ளிகளுடன் தென்கொரியா அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.

ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பந்தயத்தில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய வீரர் குர்பிரீத் சிங் 581 புள்ளிகளுடன் 10–வது இடம் பிடித்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் விஜய்குமார் (576 புள்ளிகள்) 24–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அனிஷ் பன்வாலா (576 புள்ளிகள்) 25–வது இடமே பெற்றார்.

4–வது இடத்தில் இந்தியா

இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்று 4–வது இடத்தில் உள்ளது. சீனா 18 தங்கம், 14 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கமும், தென்கொரியா 11 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கமும், ரஷியா 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கமும் வென்று முறையே முதல் 3 இடங்களை வகிக்கின்றன.

மேலும் செய்திகள்