பாரா ஆசிய விளையாட்டு போட்டி: கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது.

Update: 2018-10-13 22:30 GMT

ஜகர்தா, 

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது.

பேட்மிண்டனில் 2 தங்கம்

3–வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்தது. கடந்த 6–ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 2 தங்கம் மற்றும் 3 வெண்கலப்பதக்கம் வென்றது. பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21–19, 15–21, 21–14 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியா வீரர் உகுன் ருகான்டியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இதேபோல் பேட்மிண்டன் போட்டியின் மற்றொரு பிரிவில் நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் தருண் 21–16, 21–6 என்ற நேர்செட்டில் சீன வீரர் யுயாங் காவை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீரர்கள் மனோஜ் சர்கார் (ஒற்றையர் பிரிவு), பிரமோத் பகத்–மனோஜ் சர்கார் (இரட்டையர் பிரிவு), ஆனந்தகுமார்–நிதேஷ் குமார் (இரட்டையர் பிரிவு) ஆகியோர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

இந்தியா 72 பதக்கம் வென்றது

பாரா ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவு பெற்றது. இந்த போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என்று மொத்தம் 72 பதக்கங்கள் வென்று 9–வது இடத்தை பிடித்தது. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 2014–ம் ஆண்டில் இந்தியா 33 பதக்கங்கள் வென்றதே (3 தங்கம், 14 வெள்ளி, 16 வெண்கலம்) அதிகபட்சமாக இருந்தது. சீனா 172 தங்கம், 88 வெள்ளி, 59 வெண்கலம் என்று மொத்தம் 319 பதக்கங்கள் வென்று பதக்கபட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

மேலும் செய்திகள்