‘கேலோ’ விளையாட்டில் மராட்டியம் சாம்பியன் - தமிழகத்துக்கு 5-வது இடம்

‘கேலோ’ விளையாட்டு போட்டியில் மராட்டியம் மொத்தம் 228 பதக்கங்கள் குவித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வசப்படுத்தியது. தமிழகம் 5-வது இடத்தை பிடித்தது.

Update: 2019-01-20 22:30 GMT
புனே,

2-வது ‘கேலோ’ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி மராட்டியத்தில் உள்ள புனே நகரில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. இதில் தடகளம், டென்னிஸ், வில்வித்தை, கால்பந்து, கைப்பந்து, கபடி, மல்யுத்தம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல் உள்பட 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்தும் ஏறக்குறைய 6 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான கைப்பந்து போட்டியின் (21 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 23-25, 11-25, 25-23, 25-18, 15-9 என்ற செட் கணக்கில் போராடி கேரளாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. அதே சமயம் இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-21, 15-25, 23-25, 20-25 என்ற செட் கணக்கில் கேரளாவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதாயிற்று.

பெண்களுக்கான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் (21 வயதுக்குட்பட்டோர்) தமிழக அணி, மணிப்பூரை சந்தித்தது. இதில் பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் மணிப்பூர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் ஆண்கள் பிரிவில் மிசோரம் அணி, கேரளாவை வென்றது. கூடைப்பந்து போட்டியில் (21 வயதுக்குட்பட்டோர்) ஆண்கள், பெண்கள் இரண்டிலும் தமிழக அணி மகுடம் சூடியது.

மராட்டியத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை பிரேர்னா விசாரே ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் (17 வயதுக்குட்பட்டோர்) தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 11-ம் வகுப்பு மாணவியான பிரேர்னா, ‘முன்னணி வீராங்கனையாக வலம் வர வேண்டும். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு. ஆனால் இப்போதைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடுவதில் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

நேற்றுடன் நிறைவடைந்த இந்த விளையாட்டு திருவிழாவில், உள்ளூர் அணியான மராட்டியம் 85 தங்கம், 62 வெள்ளி, 81 வெண்கலம் என்று மொத்தம் 228 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 2-வது இடத்தை அரியானாவும் (62 தங்கம் உள்பட 178 பதக்கம்), 3-வது இடத்தை டெல்லியும் (48 தங்கம் உள்பட 136 பதக்கம்) பெற்றன.

தமிழக அணி 27 தங்கம், 35 வெள்ளி, 25 வெண்கலத்துடன் மொத்தம் 87 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தது. நிறைவு விழாவில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பரிசுக்கோப்பையை வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்