சகோதரி திருமணத்திற்காக ஓடிய வீராங்கனை

சகோதரியின் திருமணத்திற்கு தேவைப்படும் பணத்திற்காக மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றிருக்கிறார், பூனம் சோனுனே. 19 வயதாகும் இவர் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர்.

Update: 2019-02-17 06:00 GMT
பூனத்தின் குடும்பம் ஏழ்மையான பின்னணியை கொண்டது. தந்தை, விவசாய கூலி தொழிலாளி. அவருடைய வருமானத்தை நம்பித்தான் குடும்பம் இயங்கிக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சக்வான் கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.

சிறு வயதிலேயே பூனம் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்திருக்கிறார். அவருக்கு முறைப்படி பயிற்சி கொடுக்க பள்ளி நிர்வாகம் தீர்மானித் திருக்கிறது. எனினும் ஏழ்மை சூழ்நிலையால் பயிற்சிக்கு பணம் செலவிடமுடியாத நிலையில் பூனம் இருந்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் நடத்தும் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார்.

அங்கு தடகளத்தில் தன்னுடைய தனித்திறனை மெருகேற்றிக்கொண்டவர் கடந்த ஆண்டு நடந்த தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். பூனம் போட்டியில் பங்கேற்பதற்கு தேவையான பணத்தை அவரது குடும்பத்தினரால் திரட்ட முடியவில்லை. விஜயேந்தர் சிங்கின் பயிற்சி மையம்தான் போதுமான நிதி திரட்டி போட்டிகளில் பங்கேற்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பூனத்தின் சகோதரிக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தார்கள். எனினும் திருமண செலவுக்கு போதுமான பணம் அவர்களிடம் இல்லை. இதையடுத்து சகோதரியின் திருமணத்திற்கு தன்னால் முடிந்த அளவுக்கு நிதி திரட்டி கொடுக்க பூனம் தீர்மானித்தார். புனேவில் மாரத்தான் போட்டி நடைபெறுவதை அறிந்தவர் அதில் பங்கேற்று வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொண்டார். ஏற்கனவே தடகளத்தில் பங்கேற்ற அனுபவமும், தொடர் பயிற்சியும் மாரத்தான் பந்தயத்தை சிரமமின்றி எதிர்கொள்ள வைத்திருக்கிறது.

சகோதரியின் திரு மணத்தை நல்லபடியாக நடத்தி முடிப்பதற்கு முதல் பரிசுக்கான ரொக்கப் பணத்தை வென்றே ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் களம் இறங்கியவர், பந்தய தூரத்தை கடந்து வெற்றி வாகை சூடிவிட்டார். அவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை கிடைத்தது. அதனை சகோதரியின் திருமணத்திற்கு கொடுத்துவிட்டார். எனினும் அவரால் சகோதரியின் திருமணத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சகோதரி திருமணம் நடக்கும் நாட்களில்தான் தெற்கு ஆசிய விளையாட்டு போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்க பூனம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்