ஆசிய தடகள போட்டி இன்று தொடக்கம்

23–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்கி 24–ந்தேதி வரை நடக்கிறது.

Update: 2019-04-20 21:00 GMT

தோகா, 

23–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்கி 24–ந்தேதி வரை நடக்கிறது. 2017–ம் ஆண்டு புவனேசுவரத்தில் நடந்த இந்த போட்டியில் இந்தியா 12 தங்கம் உள்பட 29 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஆனால் இந்த முறை அதிக பதக்கங்களை இந்திய தரப்பில் இருந்து நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்தவரான நீரஜ் சோப்ரா, தேசிய சாதனையாளரான தருண் அய்யாசாமி (ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), ஆசிய விளையாட்டு சாம்பியனான மன்ஜித் சிங் (800 மீட்டர் ஓட்டம்) உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் காயம் காரணமாக ஆசிய தடகளத்தில் பங்கேற்கவில்லை. இதே போல் 2017–ம் ஆண்டில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த ஜி.லட்சுமணன், பெடரே‌ஷன் கோப்பை போட்டியில் சாதிக்காததால் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. மூத்த வீராங்கனை சுதா (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டம்) அணியில் இடம் பெற்றிருந்தும் அவருக்கு விளையாட்டு அமைச்சகம் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் இந்த தடவை இந்திய அணி சற்று பலவீனமாக பார்க்கப்படுகிறது. போட்டியில் மொத்தம் 42 பேர் கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் செய்திகள்