சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிப்பு: ‘அதிர்ஷ்ட ஷூ என்பதால் விரும்பி அணிந்தேன்’ - ‘தங்க மங்கை’ கோமதி விளக்கம்

சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு, அதிர்ஷ்ட ஷூ என்பதால் விரும்பி அணிந்ததாக, தங்க மங்கை கோமதி விளக்கம் அளித்தார்.

Update: 2019-04-28 23:14 GMT

திருச்சி,

கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி தங்கப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார். இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து பல சோதனைகளை தாண்டி ஆசிய தடகளத்தில் சாதனை படைத்திருக்கும் கோமதிக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் கோமதி நேற்று சொந்த ஊர் திரும்பினார். திருச்சி விமான நிலையத்திலும், அதன் பிறகு அவரது சொந்த ஊரிலும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிருபர்களிடம் பேட்டி அளித்த கோமதியிடம், கிழிந்த ஷூ அணிந்து தடகள போட்டியில் பங்கேற்றது குறித்து சமூக வலைதளங்களில் படத்துடன் வைரலாகி வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோமதி, ‘நான் சிறிது கிழிந்த ஷூ தான் அணிந்திருந்தேன். அந்த ஷூ எனக்கு மிகவும் அதிர்ஷ்டமானது. அதனால் தான் அதை நான் விரும்பி அணிந்திருந்தேன். 2 ஷூக்களின் நிறம் மாறி இருப்பது டிசைன் தான். வேறொன்றுமில்லை. சமூக வலைதளங்களில் அந்த படத்தை தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளனர்’ என்றார்.

முடிகண்டம் அருகே ஆலம்பட்டி பிரிவு ரோட்டில் பொதுமக்கள் மேள தாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். அங்கு பேசிய கோமதி, ‘நான் எப்போதுமே இந்த இடத்தில் நிற்கும் போது என்னுடன் தந்தையும் நிற்பார். ஆனால் இன்று அவர் என்னுடன் இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது’ என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

மேலும் செய்திகள்