உலக வில்வித்தை போட்டி: இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி - வெள்ளிப்பதக்கம் பெற்றது

உலக வில்வித்தை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

Update: 2019-06-17 00:02 GMT
டென் போஸ்ச்,

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நெதர்லாந்தில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் ரிகர்வ் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தருண்தீப் ராய், அதானு தாஸ், பிரவின் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பலம் வாய்ந்த சீனாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கத்தில் முன்னிலை வகித்த இந்திய அணி, அதன் பிறகு சரிவுக்குள்ளாகி 2-6 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதாயிற்று. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 6-வது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவுக்கு இன்னும் தங்கப்பதக்கம் மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்திய வீரர் தருண்தீப் ராய் கூறுகையில், ‘உலக போட்டியில் நாங்கள் பல வெள்ளிப்பதக்கம் வென்று இருக்கிறோம். ஆனால் ஒரு போதும் தங்கம் வென்றதில்லை. இந்த முறை அந்த சோகத்தை போக்க வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். இந்த தோல்வியில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இது தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்காலத்தில் தங்கப்பதக்கம் வெல்ல உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இந்த போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்