இந்தியாவில் சர்வதேச போட்டிகள் நடத்தும் விவகாரத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஒலிம்பிக் கமிட்டி

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு இந்திய அரசு ‘விசா’ வழங்க மறுத்தது.

Update: 2019-06-20 21:45 GMT

லாசானே, 

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு இந்திய அரசு ‘விசா’ வழங்க மறுத்தது. இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்தது. உலக மல்யுத்த சங்கம் இந்தியாவில் நடக்க இருந்த ஜூனியர் ஆசிய மல்யுத்த போட்டியை வேறு நாட்டிற்கு மாற்றியது. அத்துடன் பல கட்டுப்பாடுகளை விதித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) இந்தியாவில் பெரிய அளவிலான சர்வதேச போட்டிகளை நடத்தும் முயற்சிகளை கைவிடுவது என்றும் முடிவு செய்தது.

இந்த நிலையில் அரசியல் விவகாரங்களை காரணம் காட்டி தகுதியான வீரர்களுக்கு விசா வழங்க மறுக்கமாட்டோம் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதை எழுத்துபூர்வமாக இந்திய ஒலிம்பிக் சங்கம், ஐ.ஓ.சி.யிடம் சமர்பித்தது. இதில் திருப்தி அடைந்துள்ள ஐ.ஓ.சி. இந்தியாவில் சர்வதேச போட்டிகளை நடத்துவதில் விதித்த கட்டுப்பாடுகளை நேற்று தளர்த்தியது. லாசானேவில் நடந்த ஐ.ஓ.சி.யின் நிர்வாக குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்