உலக தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை பிரைஸ் முதலிடம் பிடித்தார்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை பிரைஸ் முதலிடம் பிடித்து அசத்தினார்.

Update: 2019-10-01 00:07 GMT
தோகா,

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. 6-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 209 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 3-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறியது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற 7 வீராங்கனைகளும் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி முன்னேறினார்கள். 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவை சேர்ந்த 32 வயதான ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ் 10.71 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அத்துடன் உலகின் அதிவேக வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.



 

ஒரு குழந்தைக்கு தாயான பிரைஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அதிவேக வீராங்கனை பட்டத்தை வெல்வது இது 4-வது முறையாகும். 2009, 2013, 2015-ம் ஆண்டுகளிலும் அவர் இந்த மகுடத்தை வென்று இருந்தார். தங்கப்பதக்கம் வென்றதும் பிரைஸ் தனது மகனை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார். ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த டினா ஆஷர் சுமித் தனது தேசிய சாதனையை தகர்த்து 10.83 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஐவரிகோஸ்ட் நாட்டு வீராங்கனை மேரி ஜோஸ் டாலோவ் 10.90 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஜமைக்காவின் எலைன் தாம்சன் (10.93 வினாடி) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் சீன வீராங்கனைகள் 3 பதக்கங்களையும் அள்ளினார்கள். நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான லீ ஹாங் 1 மணி 32 நிமிடம் 53 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 3-வது முறையாக தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்ற சீன வீராங்கனைகள் கியாங் ஷிஜி 1 மணி 33 நிமிடம் 10 வினாடியில் பந்தய இலக்கை கடந்து வெள்ளிப்பதக்கமும், யாங் லியுஜிங் 1 மணி 33 நிமிடம் 17 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் நடைப்பந்தயத்தில் ஒரே நாட்டு வீராங்கனைகள் அனைத்து பதக்கத்தையும் வெல்வது இதுவே முதல்முறையாகும். நடப்பு சாம்பியனான சீன வீராங்கனை யாங் ஜியாய் போட்டி தூரம் முடிய ஒரு கிலோ மீட்டர் இருக்கையில் 4-வது முறையாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பெண்களுக்கான ‘போல்வால்ட்’ பந்தயத்தில், ரஷியாவுக்கு ஊக்க மருந்து பிரச்சினையால் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பொதுவான வீராங்கனையாக பங்கேற்ற ரஷியாவை சேர்ந்த அன்ஹிலிகா சிடோரோவா 4.95 மீட்டர் உயரம் தாண்டி முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்றார். அமெரிக்காவின் சான்டி மோரிஸ் 4.90 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் நாட்டின் காத்ரினா ஸ்டிபானிடி 4.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.

ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் டெய்லர் 17.92 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். உலக போட்டியில் அவர் 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருக்கிறார். மற்றொரு அமெரிக்க வீரர் வில் கிளாய் 17.74 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பக்கமும், புர்கினா பாசோ நாட்டு வீரர் ஹியூக்ஸ் பாப்ரைன் ஜாங்கோ 17.66 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்த முகமது அனாஸ், விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ, நோவா நிர்மல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3 நிமிடம் 15.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து 7-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது. பிரேசில் அணி 8-வது மற்றும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. அமெரிக்க அணி 3 நிமிடம் 09.34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கியது. ஜமைக்கா அணி (3:11.78 வினாடி) வெள்ளிப்பதக்கமும், பக்ரைன் அணி (3:11.82 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றின.

3-வது நாள் போட்டிகள் முடிவில் அமெரிக்கா 4 தங்கம், 4 வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடமும், ஜமைக்கா 2 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 3-வது இடமும் வகிக்கின்றன.

மேலும் செய்திகள்