உலக தடகள போட்டி: ஈட்டி எறிதலில் அன்னுராணிக்கு 8-வது இடம்

உலக தடகள போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னுராணி 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

Update: 2019-10-02 23:00 GMT
தோகா,

17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் கெல்சி-லீ பார்பர் 66.56 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன வீராங்கனைகள் லி ஷியிங் (65.88 மீட்டர்), லூ ஹூய் ஹூய் (65.44 மீட்டர்) முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை பெற்றனர்.

இந்திய வீராங்கனை அன்னு ராணி 61.12 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார். தகுதி சுற்றில் 62.43 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த அன்னுராணி அதை கூட எட்ட முடியாமல் சொதப்பினார்.

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் நோவா லைலெஸ் 19.83 வினாடியில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். கனடாவின் ஆந்த்ரே டி கிராஸ் (19.95 வினாடி) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

22 வயதான நோவா லைலெஸ் கூறுகையில், ‘எனது முதலாவது உலக சாம்பியன்ஷிப் போட்டியிலேயே தங்கம் வென்று சாதித்து இருக்கிறேன். என்னை புதிய உசேன் போல்ட் (ஜமைக்கா தடகள ஜாம்பவான்) என்று சொல்லாதீர்கள். நான் நானாகவே இருந்து உங்களை மகிழ்விக்க விரும்புகிறேன்’ என்றார்.

ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தின் முதல் ரவுண்டில் இந்திய வீரர் அவினாஷ் சபில் 8 நிமிடம் 25.23 வினாடிகளில் இலக்கை கடந்து தனது பிரிவில் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் அவர் இறுதி சுற்று வாய்ப்பை இழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் ஓடும் போது சில வீரர்கள் அவரை மறிக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தியதாகவும், இல்லாவிட்டால் அவர் இன்னும் வேகமாக இலக்கை கடந்திருப்பார் என்றும் இந்திய தடகள சம்மேளனம் போட்டி அமைப்பாளர்களிடம் முறையிட்டது. இதையடுத்து வீடியோ காட்சிகளை ஆராய்ந்த போட்டி அமைப்பாளர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவினாசை இறுதிப்போட்டி பட்டியலில் சேர்த்து அறிவித்தனர். இந்திய தடகள சம்மேளனத்தின் திட்ட கமிஷன் சேர்மன் லலித் பனோட் கூறுகையில், ‘அவினாஷ் விவகாரத்தில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளோம். அதனால் இப்போது அவினாஷ் இதன் இறுதிப்போட்டியில் ஓட உள்ளார். தகுதி சுற்றில் அவர் பிடித்த நிலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அவர் 16-வது வீரராக இறுதி சுற்றில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்’ என்றார். 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் இறுதி சுற்று நாளை நடக்கிறது.

பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய சாம்பியனான இந்தியாவின் பி.யூ.சித்ரா தகுதி சுற்றில் 4 நிமிடம் 11.10 வினாடிகளில் இலக்கை எட்டினார். மொத்தத்தில் ஓடிய 35 பேரில் அவர் 30-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும்.

மேலும் செய்திகள்