உலக குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் உள்பட 4 இந்திய வீராங்கனைகள் அரை இறுதிக்கு தகுதி பதக்கத்தை உறுதி செய்தனர்

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம், மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா ஆகியோர் அரைஇறுதிக்கு தகுதி பெற்றதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தனர்.

Update: 2019-10-10 22:19 GMT
உலன் உடே,

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான மேரிகோம், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற கொலம்பியாவின் வாலென்சியா விக்டோரியாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த போட்டியில் நடுவர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வாலென்சியா விக்டோரியா அதிகமான குத்துகளை விட்டார். ஆனால் அதனை தனது அனுபவத்தின் மூலம் அருமையாக தடுத்த மேரிகோம் சமயம் பார்த்து எதிராளிக்கு குத்துகள் விட்டு திணறடித்தார். முடிவில் மேரிகோம் 5-0 என்ற கணக்கில் வாலென்சியா விக்டோரியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். நாளை (சனிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதியில் மேரிகோம், ஐரோப்பிய சாம்பியனான பஸ்னாஸ் சகிரோக்லுவை (துருக்கி) சந்திக்கிறார்.

அரைஇறுதிக்குள் நுழைந்த 36 வயதான மேரிகோம் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கம் வெல்வதை உறுதி செய்தார். 51 கிலோ உடல் எடைப்பிரிவில் மேரிகோம் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான மேரிகோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6 தங்கப்பதக்கமும் (2002, 2005, 2006, 2008, 2010, 2018), ஒரு வெள்ளிப்பதக்கமும் (2001) வென்றுள்ளார். 8-வது பதக்கத்தை உறுதி செய்து இருப்பதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கம் வென்றவர் என்ற பெருமையை மேரிகோம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு கியூபா வீரர் பெலிக்ஸ் சவோன் உலக குத்துச்சண்டையில் 7 பதக்கம் (6 தங்கம், ஒரு வெள்ளி) கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.

81 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை கவிதா சாஹல் 0-5 என்ற கணக்கில் பெலாரஸ் வீராங்கனை காட்சியர்னா கவாலிவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

48 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் மஞ்சு ராணி (இந்தியா) 4-1 என்ற கணக்கில் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவரும், கடந்த முறை வெண்கலப்பதக்கம் வென்றவருமான கிம் ஹயாங் மியை (தென்கொரியா) சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமட் ராக்சட்டுடன் மோதுகிறார்.

54 கிலோ உடல் எடைப்பிரிவு கால்இறுதியில் இந்தியாவின் ஜமுனா போரோ 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் உர்சுலா கோட்லோப்பை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். ஜமுனா போரோ அடுத்து ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சீன தைபேயின் ஹூயாங் ஹியோ வென்னை சந்திக்கிறார்.

69 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதியில் கடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் 4-1 என்ற கணக்கில் போலந்தின் கரோலினா கோஸ்ஜிஸ்காவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அரைஇறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், சீனாவின் யாங் லியை எதிர்கொள்கிறார். அரைஇறுதி சுற்றைய எட்டிய மஞ்சு ராணி, ஜமுனா போரோ, லவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோரும் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்