ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சீன நீச்சல் வீரர் சன் யாங்குக்கு 8 ஆண்டு தடை

ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற சீன நீச்சல் வீரர் சன் யாங்க், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

Update: 2020-02-28 23:49 GMT
லாசானே,

சீனாவைச் சேர்ந்த பிரபல நீச்சல் பந்தய வீரர் சன் யாங். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கமும், 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கமும் வென்ற சாதனையாளர்.

28 வயதான சன் யாங் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். போட்டி இல்லாத காலத்திலும் ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்ற விதிமுறைப்படி 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டிற்கு ஊக்கமருந்து தடுப்பு குழுவினர் மாதிரி சேகரிக்க சென்றனர். ஆனால் அவர் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை வழங்க மறுத்து விட்டார். இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச நீச்சல் சம்மேளனம் அவர் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறவில்லை என்று கூறி விடுவித்தது. இதை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை, சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தது. இது குறித்து விசாரித்த தீர்ப்பாயம் சன் யாங்குக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள சன் யாங், ‘நான் அப்பாவி. எந்த தவறும் செய்யவில்லை. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வேன். உண்மை நிச்சயம் வெளிவரும்’ என்றார். சன் யாங்குக்கு ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 3 மாத தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்