ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: மேரிகோம், அமித் பன்ஹால் கால்இறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில், மேரிகோம், அமித் பன்ஹால் ஆகியோர் கால்இறுதிக்கு தகுதிபெற்றனர்.

Update: 2020-03-08 00:01 GMT
அம்மான்,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால், மங்கோலியா வீரர் எங்மனாடாக் கார்குவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில், கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான அமித் பன்ஹால் 3-2 என்ற கணக்கில் எங்மனாடாக்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் அமித் பன்ஹால், பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை எதிர்கொள்கிறார். 57 கிலோ உடல் எடைப்பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி 1-4 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் மிராஜிஸ்பெக் மிர்ஜாக்ஹாலிலோவிடம் தோற்று வெளியேறினார்.

பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக சாம்பியனான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தின் தாஸ்மைன் பென்னியை விரட்டியடித்து கால்இறுதியை எட்டினார். மேரிகோம் அடுத்து ஐரிஷ் மாக்னோவை (பிலிப்பைன்ஸ்) எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்