ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி: டிசம்பரில் நடத்த முடிவு

ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள், டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-04-28 23:00 GMT
புதுடெல்லி, 

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் கடந்த மாதம் (மார்ச்) நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆசிய சாம்பியன்ஷிப், இந்திய ஓபன் உள்பட பல்வேறு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியை வருகிற செப்டம்பர் மாதத்தில் நடத்த தயாரா? என்பது குறித்து தகவல் தெரிவிக்கும் படி உலக பேட்மிண்டன் சம்மேளம், இந்திய பேட்மிண்டன் சங்கத்துக்கு கடிதம் எழுதி இருந்தது. இதற்கு பதிலளித்துள்ள இந்திய பேட்மிண்டன் சங்கம், ‘இந்திய ஓபன் போட்டியை வருகிற டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தலாம்‘ என்று தெரிவித்து இருக்கிறது. இது குறித்து இந்திய பேட்மிண்டன் சங்க பொதுச் செயலாளர் அஜய் சிங்ஹனியா கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியை வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வருவது மற்றும் போட்டிக்கு மத்திய அரசின் அனுமதியை பெறுவது ஆகியவற்றை பொறுத்தே இது சாத்தியமாகும்‘ என்றார்.

மேலும் செய்திகள்