ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய ஈட்டி எறிதல் வீரர்.

Update: 2020-06-14 22:11 GMT
புதுடெல்லி, 

இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் தேவிந்தர் சிங் காங். இவரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எடுக்கப்பட்ட சிறுநீர் மாதிரியை பரிசோதித்த போது அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றவரான தேவிந்தர் சிங் 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்த உள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 8 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த 31 வயதான தேவிந்தர் சிங் கூறுகையில், ‘கடந்த ஆண்டு இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டிக்கு முன்பாக எனக்கு கடுமையான தொண்டை வலி ஏற்பட்டது. அணி நிர்வாகத்தின் அனுமதியுடன் பாட்டியாலாவில் தனியார் மருத்துவரிடம் ஆலோசித்தேன். டாக்டர் எனக்கு மோக்சிடாஸ் 500, பீட்டா டெக்சாமிதாசோன் ஆகிய மருந்துகளை கொடுத்தார். இந்த மருந்துகளால் தான் நான் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்திருக்கிறேன். நான் எனது உடல்திறனை அதிகரிப்பதற்காக இந்த மருந்துகளை சாப்பிடவில்லை. எனவே இதில் எனது தவறு எதுவும் இல்லை. இதை நான் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையிடம் விளக்குவேன். இந்த பிரச்சினையில் இருந்து விடுவிக்கப்படுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்