ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தடகள வீரர் சுசா சிங் கொரோனாவால் அலைக்கழிக்கப்பட்ட அவலம்

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தடகள வீரர் சுசா சிங் கொரோனாவால் ஆஸ்பத்திடியில் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

Update: 2020-08-20 00:41 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் ஆளாகி இருக்கிறார்கள். 1970-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், 1970 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் அரங்கேறிய ஆசிய விளையாட்டில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய இந்திய அணியில் இடம் பிடித்தவருமான சுசா சிங் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து இருக்கிறார். கொரோனா சிகிச்சையின் போது ஆஸ்பத்திரியில் தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்காக பணம் கட்டும்படி நிபந்தனை விதித்ததால் உறவினர்களிடம் கடன் வாங்கி நிலைமையை சமாளித்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த முன்னாள் தடகள வீரரான சுசா சிங் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அளித்த பேட்டியில், ‘கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நான் சளியாலும், கடுமையான காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டேன். அதற்காக அருகில் உள்ள கிளினிக் சென்று ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்தேன். காய்ச்சல் குறையாததால் 2 நாட்கள் கழித்து ஜலந்தரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று ரூ.5 ஆயிரம் செலுத்தி மருத்துவ பரிசோதனை செய்தேன். அங்கிருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு 2 மணி நேர பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த ஆஸ்பத்திரியில் 2 இரவு தங்கியதற்காக ரூ.30 ஆயிரம் செலுத்தினேன்.

அதைத் தொடர்ந்து கொரோனா சிகிச்சைக்காக கடந்த 4-ந் தேதி பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அடுத்த நாளில் ஆஸ்பத்திரி ஊழியர் பகல் 12 மணிக்குள் ரூ.1 லட்சத்தை சிகிச்சைக்கு முன்பணமாக செலுத்தும்படி கூறினார். அதன்படி பணம் செலுத்தினேன். அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ரூ. 1 லட்சம் கட்டும்படி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எனது உறவினர்களிடம் உதவி கேட்டு அவர்களிடம் இருந்து பணம் பெற்று அதனை கட்டினேன். அதன் பிறகு தான் ஆஸ்பத்திரியில் இருந்து நான் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டேன். மொத்தத்தில் நான் ரூ.2½ லட்சம் செலவிட்டேன். உண்மையிலேயே பணத்துக்காக இப்படி அலைக்கழிக்கப்பட்டது நாட்டுக்கு பெருமை சேர்த்த முன்னாள் வீரருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்’ என்றார்.

மேலும் செய்திகள்