இந்திய தடகள அணியின் பயிற்சியாளர் மரணம் - விடுதி அறையில் பிணமாக கிடந்தார்

இந்திய தடகள அணியின் பயிற்சியாளர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். விடுதி அறையில் பிணமாக கிடந்தார்.

Update: 2021-03-06 00:35 GMT
பாட்டியாலா,

இந்திய தடகள அணியின் மிதமான மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தயத்துக்கான பயிற்சியாளராக பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நிகோலை ஸ்னிசரேவ் (வயது 72) கடந்த ஜனவரி மாதம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். செப்டம்பர் மாதம் வரை அவர் பொறுப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டியையொட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவுக்கு வருகை தந்த ஸ்னிசரேவ் நேற்று மைதானத்திற்கு வரவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த சக பயிற்சியாளர்கள் அவர் தங்கியிருந்த பாட்டியாலா பயிற்சி முகாமில் உள்ள விடுதிக்கு சென்ற போது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் படுக்கையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? சாவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகே சாவுக்கான காரணம் தெரிய வரும் என்று இந்திய தடகள சம்மேளன தலைவர் அடில்லே சுமரிவாலா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்