ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.

Update: 2021-03-06 00:39 GMT
பாட்டியாலா, 

3-வது இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட இந்திய வீரரான அரியானாவை சேர்ந்த 24 வயது நீரஜ் சோப்ரா தனது 5-வது முயற்சியில் 88.07 மீட்டர் தூரம் வீசி புதிய தேசிய சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார். 

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ரா 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே தேசிய சாதனையாக இருந்தது. அந்த தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவில் நடந்த சர்வதேச போட்டியில் ஒலிம்பிக் தகுதி இலக்கை (85 மீட்டர்) எட்டிய நீரஜ் சோப்ரா கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு கலந்து கொண்ட முதல் போட்டி இதுவாகும். 

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் மற்றொரு இந்திய வீரரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷிவ்பால் சிங் (81.63 மீட்டர்) 2-வது இடமும், மற்றொரு அரியானா வீரர் சஹில் சில்வால் (80.65 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர்.

மேலும் செய்திகள்