தேசிய சீனியர் தடகளம்: 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கனிமொழி தங்கம் வென்றார்

24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது.

Update: 2021-03-18 05:55 GMT
பாட்டியாலா,

இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி 13.63 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தெலுங்கானா வீராங்கனை அக்சரா நந்தினி (13.88 வினாடி) வெள்ளிப்பதக்கமும், தமிழகத்தை சேர்ந்த நித்யா ராம்ராஜ் (14.08 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள். நீளம் தாண்டுதலில் ஜார்கண்ட் வீராங்கனை பிரியங்கா (6.10 மீட்டர்) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். கேரள வீராங்கனை ரிந்து மேத்யூ (6.07 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஷெரின் (6.07 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் பி.வீரமணி 14.57 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். கர்நாடகாவின் ஸ்ரீகாந்த் மத்யா (14.85 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், ஆந்திராவின் யஷ்வந்த் குமார் (15.01 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். உயரம் தாண்டுதலில் மராட்டிய வீரர் சர்வேஷ் அனில் குஷார் (2.15 மீட்டர்) தங்கப்பதக்கமும், தமிழக வீரர் ஆதர்ஷ் ராம் (2.10 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், கேரளா வீரர் ஜியோ ஜோஸ் (2.10 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் வீரமணி, வீராங்கனை கனிமொழி ஆகியோர் சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தலைமை பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

மேலும் செய்திகள்