தேசிய சீனியர் தடகளம்: 200 மீட்டர் ஓட்டத்தில் பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தார் தனலட்சுமி

24-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது.

Update: 2021-03-19 03:38 GMT
பாட்டியாலா, 

இதில் 4-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் தமிழகத்தின் எஸ்.தனலட்சுமி (23.26 வினாடி), முன்னணி வீராங்கனையான அசாமை சேர்ந்த ஹிமா தாஸ்சை (24.39 வினாடி) பின்னுக்கு தள்ளி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் இந்த போட்டியில் தனலட்சுமி புதிய சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் சென்னையில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் முன்னாள் பிரபல வீராங்கனை பி.டி.உஷா (கேரளா) 23.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தனலட்சுமி நேற்று முறியடித்தார். இதனால் அவர் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அசத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி, ஒடிசாவின் டுட்டீ சந்தை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேஸ்னா கிலிஸ்டஸ் மேரி 1.84 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 20 வயதான அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அரியானா வீராங்கனை ரேகா (1.75 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை ஜிஜி ஜார்ஜ் ஸ்டீபன் (1.70 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

மேலும் செய்திகள்