உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய அணிக்கு மேலும் 4 பதக்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணிக்கு மேலும் 4 பதக்கம் கிடைத்தன.

Update: 2021-03-21 20:43 GMT
புதுடெல்லி, 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப்பதக்கம் கிட்டியது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் மானு பாகெர், யஷாஸ்வினி சிங் தேஸ்வால், ஸ்ரீ நிவேதா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்துக்கான சுற்றில் 16-8 என்ற கணக்கில் போலந்து அணியினரை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். இதே போல் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, ஷஜார் ரிஸ்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 17-11 என்ற புள்ளி கணக்கில் வியட்னாம் அணியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இ்ந்தியாவின் பிரதாப் சிங் தோமர், தீபக் குமார், பங்கஜ் குமார் ஆகியோர் கொண்ட இந்திய அணியினர் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றனர்.

பெண்களுக்கான ஸ்கீட் பிரிவில் இந்திய வீராங்கனை கனேமேட் செகோன் 40 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் சண்டிகாரை சேர்ந்த 20 வயதான கனேமேட், சீனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் பிரிவில் பதக்கமேடையில் ஏறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். இதில் இங்கிலாந்தின் அம்பெர் ஹில் தங்கப்பதக்கமும் (51 புள்ளி), கஜகஸ்தானின் ஜோயா கிராவ்சென்கோ (51 புள்ளி) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

3-வது நாள் போட்டிகளின் முடிவில் இ்ந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என்று 9 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 3 தங்கம், 2 வெள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகள்