‘18 மாதகால உழைப்புக்கு கிடைத்த பரிசு’ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற சென்னை வீராங்கனை நேத்ரா பேட்டி

‘18 மாதகால உழைப்புக்கு கிடைத்த பரிசு’ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற சென்னை வீராங்கனை நேத்ரா பேட்டிய அளித்துள்ளார்.

Update: 2021-04-10 00:57 GMT
சென்னை, 

ஓமனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று பாய்மர படகு சாம்பியன்ஷிப்பில் லேசர் ரேடியல் பிரிவில் அசத்திய சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் அதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் பாய்மரபடகு போட்டியில் நுழையும் முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ள 23 வயதான நேத்ரா, எஸ்.ஆர்.எம். என்ஜினீரியங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘சிறு வயதில் டென்னிஸ், கூடைப்பந்து, சைக்கிள் பந்தயம் ஆகிய போட்டிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி பார்த்தேன். பரதநாட்டியத்தை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினேன். கடைசியில் பாய்மரபடகு போட்டிக்காக அவை எல்லாவற்றையும் விட வேண்டியதாகி விட்டது. கோடை காலத்தில் நடந்த பாய்மர படகு போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு அதில் தீவிரமாகி முழுமையாக அந்த விளையாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்பெயினில் மாட்டிக்கொண்டேன். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அங்கு சர்வதேச வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு பயனுள்ளதாக மாற்றிக்கொண்டேன். சொல்லப்போனால், கடந்த 18 மாதங்களாக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருந்து பயிற்சி மேற்கொண்டேன். அதற்குரிய பலன் இப்போது கிடைத்துள்ளது. இது எனது முதல் ஒலிம்பிக் போட்டி. இதில் எனது சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிப்பேன். 2024-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் முன்னணி வீராங்கனைகளுக்கு நிகராக கடும் சவால் அளிப்பதற்கு ஏற்ப தயார்படுத்திக்கொள்வதற்கு டோக்கியோ ஒலிம்பிக் முதல்படியாகும். நான் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு எனது பெற்றோரே காரணம். அவர்கள் உணர்வுபூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது’ என்றார்.

மேலும் செய்திகள்