ஆசிய குத்துச்சண்டையில் 5-வது பதக்கம்: கொரோனாவை தோற்கடித்தது போன்று உணர்கிறேன்: இந்திய வீரர் ஷிவதபா பேட்டி

துபாயில் நடந்து வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவதபா 64 கிலோ உடல் எடைப்பிரிவில் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Update: 2021-05-27 23:50 GMT

அரைஇறுதியில் அவர் நடப்பு சாம்பியன் பகோதுர் உஸ்மோனோவை (தஜிகிஸ்தான்) இன்று எதிர்கொள்கிறார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து 5-வது முறையாக பதக்கம் வெல்லும் அசாமைச் சேர்ந்த 27 வயதான ஷிபதபா நேற்று அளித்த பேட்டியில், ‘ஆசிய குத்துச்சண்டை வரலாற்றில் ஆண்கள் பிரிவில் அதிக பதக்கம் வென்ற (5 பதக்கம்) இந்திய வீரர் என்ற சாதனையை அறியும் போது உண்மையிலேயே குதூகலம் அளிக்கிறது. இச்சாதனையை முதலில் படைக்கும் வீரராக நான் இருப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இது மிகச்சிறந்த சாதனை. இதுவரை நான் வென்ற பதக்கங்களில் எது சிறந்தது என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு பதக்கமும் வெவ்வேறு சூழலில் வென்றது. இதில் எது பிடித்தமானது என்று சொல்ல முடியாது. இது கொரோனா பரவல் காலம். ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவினால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இத்தகைய சூழலில் போட்டிகளில் பங்கேற்று பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறேன். இதன் மூலம் மனரீதியாக, நான் கொரோனா வைரசை ஒருமுறை தோற்கடித்து விட்டது போன்று உணர்கிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்