ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மரணம்

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2021-06-10 23:48 GMT

டிங்கோ சிங் மரணம்

1998-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்து பெருமை சேர்த்தவர் டிங்கோ சிங். அந்த போட்டியில் அவர் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த வோங் சோன்தயா (தாய்லாந்து) உள்பட முன்னணி வீரர்களை வீழ்த்தி வாகை சூடினார். அந்த ஆண்டிலேயே சிறந்த வீரருக்கான அர்ஜூனா விருதை பெற்ற அவர் 2000-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றார்.

இந்திய கடற்படை ஊழியரான டிங்கோ சிங் போட்டியில் இருந்து விடைபெற்ற பிறகு பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். 2017-ம் ஆண்டு முதல் டிங்கோ சிங் கல்லீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட டிங்கோ சிங் மஞ்சள் காமாலை மற்றும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். இந்த நிலையில் நீண்ட காலமாக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த டிங்கோ சிங் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தனது வீட்டில் நேற்று மரணம் அடைந்தார். 42 வயதான அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்

டிங்கோ சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘டிங்கோ சிங் விளையாட்டு உலகின் சூப்பர் ஸ்டார். தலை சிறந்த குத்துச்சண்டை வீரரான அவர் நாட்டுக்கு பல பெருமைகளை சேர்த்து இருப்பதுடன் குத்துச்சண்டை மேலும் பிரபலமடைவதற்கும் பங்களித்து இருக்கிறார். அவரது மறைவுக்கு வருந்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் கூறுகையில், ‘டிங்கோ சிங் ஒரு நட்சத்திர வீரர். அவருடைய பந்தயத்தை பார்ப்பதற்காக மணிப்பூரில் வரிசையில் காத்து நின்றது எனக்கு நினைவில் இருக்கிறது. அவரது செயல்பாடு எனக்கு ஊக்கம் அளித்தது. அவர் என்னுடைய கதாநாயகன். அவரது மரணம் மிகப்பெரிய இழப்பாகும். அவர் மிக விரைவில் சென்று விட்டார். வாழ்க்கை ரொம்பவும் கணிக்க முடியாததாக இருக்கிறது’ என்றார். மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உள்பட பலரும் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்