ஒலிம்பிக்கில் நடந்த வித்தியாசமான மோசடிகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்காக எத்தனையோ மோசடிகள் அரங்கேறியுள்ளன. அவற்றில் மறக்க முடியாத சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

Update: 2021-07-09 04:33 GMT
மாரத்தான் கோல்மால்: 1904-ம் ஆண்டு அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த 3-வது ஒலிம்பிக்கில், மாரத்தானில் அமெரிக்க வீரர் பிரட்ரிக் லோர்ஸ் செய்த ஏமாற்று வித்தை வித்தியாசமானது. 

14.5 கிலோமீட்டர் ஓடி சோர்ந்து போன அவர் அதன் பிறகு அங்கிருந்து தனது பயிற்சியாளரின் கார் மூலம் அடுத்த 17.7 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தார். கார் பழுதானதால் மீண்டும் ஓட்டத்தை தொடர்ந்த அவர் முதல் நபராக ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார். அவர் தான் வெற்றியாளர் என்று போட்டி நடுவர்கள் நினைத்தனர். ஆனால் பார்வையாளர்கள் அவர் செய்த தில்லுமுல்லுவை சுட்டிகாட்டினர். 

குட்டுவெளியானதும் சுதாரித்துக் கொண்ட அவர் சிறிது நேரத்தில் தான் ஜாலிக்காக இதனை செய்தேன். நான் முழுமையாக ஓடவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இதனால் ஓராண்டு தடை நடவடிக்கைக்கு உள்ளானார்.

இந்த மாரத்தானில் மற்றொரு அமெரிக்க வீரர் தாமஸ் ஹிக்ஸ் தங்கம் வென்றார். ஆனால் அவர் ஓடும் போது அவரது பயிற்சியாளர்கள் அவருக்கு மதுவுடன், ஸ்டிரிச்னைன் என்ற ஒருவகையான ஆபத்து நிறைந்த ஊக்கமருந்தையும் சேர்த்து கொடுத்தனர். இதனால் அவர் பந்தய தூரத்தை கடந்ததும் மயங்கி விழுந்தார். டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினர். அவர் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அந்த மருந்தை எடுத்து இருந்தால் மரணத்தை தழுவியிருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அப்போது இருந்த விதிமுறை வேறுமாதிரியாக இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. மாரத்தான் சாம்பியனாகவே அறிவிக்கப்பட்டார்.

வில்லங்கமான வாள்: 1976-ம் ஆண்டு மான்ட்ரியல் ஒலிம்பிக்கில் சோவியத் யூனியன் வீரர் போரிஸ் ஆனிஷ்சென்கோ பென்டத்லான் விளையாட்டின் ஒரு பகுதியாக வாள்வீச்சு போட்டியில் களம் இறங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, வாள் தாக்குதல் எதிராளி மீது படாமலும் கூட அவர் புள்ளிகளை பெற்றதை இங்கிலாந்து அணியினர் கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் புள்ளிகளை குவிப்பதற்காக தனது வாள் மற்றும் பாதுகாப்பு கவசத்தில் சிலமாற்றங்களை வயரிங் மூலம் செய்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. 3 முறை உலக சாம்பியனான அவருக்கு வாழ்நாள் 
தடை விதிக்கப்பட்டது.

ஆள்மாறாட்டம்: 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பியூர்டோ ரிகோ தடகள வீராங்கனை மேட்லின் நீளம் தாண்டுதலின் போது காயமடைந்தார். இதனால் அடுத்து நடந்த 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு தனது சாயலில் இருந்த சகோதரியான (இரட்டை சகோதரி) மார்கரேட்டை அனுப்பி வைத்தார். தகுதி சுற்றில் அவர் வேகமாக ஓடினார். அடுத்த சுற்றுக்கும் அந்த அணி முன்னேறியது. ஆனால் ஆள்மாறாட்டத்தை கண்டறிந்த பியூர்டோ ரிகோ அணியின் தலைமை பயிற்சியாளர், இறுதி சுற்றில் இருந்து தங்கள் அணியை விலக வைத்தார்.

தங்க மங்கையின் பித்தலாட்டம்: அமெரிக்காவின் பிரபல தடகள வீராங்கனையான மரியோன் ஜோன்ஸ் 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றார். ஒரே ஒலிம்பிக்கில் தடகளத்தில் 5 பதக்கம் ருசித்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். அப்போதே அவர் மீது ஊக்கமருந்து சலசலப்பு கிளம்பியது. ஆனால் அதை அவர் மறுத்து வந்தார். இருப்பினும் உடல் சக்தியை அதிகரிக்கும் வகையில் ஊக்கமருந்தை பயன்படுத்தியதன் விளைவாகவே மரியோன் ஜோன்ஸ் 5 பதக்கங்களை வேட்டையாடியது 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தது.
ஒலிம்பிக்குக்கு முன்பாகவும், அதற்கு பிறகும் ஊக்கமருந்து உட்ெகாண்டதை கண்ணீர் மல்க ஒப்புக் கொண்ட மரியோன் ஜோன்சின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. 6 மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவித்தார்.

மேலும் செய்திகள்