ஊனத்தை வென்ற சாதனை சிகரங்கள்

உடலில் ஏதாவது ஒரு குறைபாட்டோடு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உண்டு. இதில் சாதனைகளை நிகழ்த்தி கவனத்தை ஈர்த்த முக்கியமான வீரர், வீராங்கனைகள் பற்றிய ஒரு அலசல் வருமாறு.

Update: 2021-07-10 22:51 GMT
ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசம்: 1904-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 3-வது ஒலிம்பிக்கில் எல்லோரையும் திரும்பிபார்க்க வைத்த ஒரு வீரர் ஜார்ஜ் எய்சர். ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய இவர் ரெயில் விபத்தில் இடது காலை இழந்தவர். செயற்கை காலை பொருத்திக்கொண்டு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்ற அவர் அந்தரத்தில் பல்டி, பார் கம்பியை பிடித்தபடி தலைகீழாக நிற்பது, உடலை வில்லாக வளைப்பது, கயிற்றில் ஏறுவது உள்ளிட்ட பல்வேறு சாகசம் செய்து 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 6 பதக்கத்தை ைகப்பற்றி வியக்க வைத்தார். சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த அவர் பிற்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உந்தி சக்தியாக விளங்கினார்.

குதிரைபந்தய மங்கை: டென்மார்க் நாட்டின் குதிரையேற்ற பந்தய வீராங்கனை லிஸ் ஹர்ெடல் தனது 23-வது வயதில் கர்ப்பமாக இருந்தபோது போலியோவினால் பாதிக்கப்பட்டு முழங்காலுக்கு கீழ் முழுமையாக செயலிழந்தது. குழந்ைதயை ஆரோக்கியமாக பெற்றெடுத்தார். ஆனாலும் குதிரை பந்தயத்தின் மீதான மோகம் தணியாததால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். 1952-ம் ஆண்டு ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் குதிரையேற்ற பந்தயத்தில் ராணுவத்தினர் மட்டுமின்றி மற்றவர்களும், பெண்களும் கலந்து கொள்ள முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டது. இதன் ‘டிரஸ்சாஜ்’ தனிநபர் பிரிவில் (இருபாலரும் பங்கேற்பு) களம் கண்ட லிஸ் ஹர்டெல் வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தி ஒலிம்பிக் குதிைரயேற்றத்தில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். இத்தனைக்கும் குதிரையேறுவதற்கும், இறங்குவதற்கும் அடுத்தவர் உதவியை அவர் நாட ேவண்டி இருந்தது. அத்தகைய நிலைமையிலும் சாதித்து காட்டிய அவர் அடுத்த ஒலிம்பிக்கிலும் மயிரிழையில் தங்கப்பதக்கத்தை நழுவ விட்டு வெள்ளிப்பதக்கத்தோடு திருப்தியடைந்தார்.

ஹங்கேரி ஹீரோக்கள்: ஹங்கேரி துப்பாக்கி சுடுதல் வீரர் கரோலி தகாக்ஸ். ராணுவத்தில் பணியாற்றிய இவர் துப்பாக்கி சுடும் திறனில் வல்லவராக திகழ்ந்தார். துரதிர்ஷ்டவசமாக கையெறி குண்டு வெடித்ததில் அவரது வலது கை சிதைந்தது. ஆனாலும் மனம் தளரவில்லை. அதன் பிறகு இடது கையால் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி மேற்கொண்ட அவர் ஹங்கேரி ஒலிம்பிக் அணிக்கும் தேர்வானார். 1948-ம் ஆண்டு மற்றும் 1952-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கத்தை சுட்டு அசர வைத்தார்.

ஹங்கேரி நாட்டு வாட்டர்போலோ மற்றும் நீச்சல் வீரர் ஆலிவர் ஹலாசி. தனது 11-வது வயதில் ரெயில் மோதியதில் இடது கால் முட்டிக்கு கீழ் ஊனமானவர். நீச்சல் குளத்தில் தனது திறமையை காண்பித்த அவர் வாட்டர்போலோ விளையாட்டில் (தண்ணீரில் நீந்தியபடி கோல் அடிக்கும் போட்டி) பிரமாதப்படுத்தினார். 1928, 1932, 1936-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வாட்டர்போலோ அணிகளுக்கான போட்டியில் பங்கேற்ற அவர் ஒரு வெள்ளி மற்றும் 2 தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார்.

லண்டனை கலக்கிய பிளேட்ரன்னர்: தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் பிஸ்டோரியஸ் உலக முழுவதும் பிரபலமான ஓட்டப்பந்தய வீரர். முட்டிக்கு கீழ் இரண்டு கால்களும் கிடையாது. ஆனால் செயற்கை கால்களை பொருத்திக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடுவார். ‘பிளேட் ரன்னர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் பெரும் போராட்டத்துக்கு பிறகு 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றார். 400 மீட்டர் ஓட்டத்தில் அரைஇறுதி வரை முன்னேறிய அவர், தொடர் ஓட்டத்திலும் பங்கேற்றார். ஆனால் பதக்கம் வெல்லவில்லை. இருப்பினும் நிறைவு விழாவில் அந்த அணிக்குரிய தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டில் காதலியை கொலை செய்த வழக்கில் சிக்கி ஜெயில் வாசத்தை அனுபவிக்கிறார்.

மேலும் செய்திகள்