‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’ டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் பேட்டி

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-20 00:17 GMT
சென்னை, 

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், டெல்லியை சேர்ந்த மனிகா பத்ரா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுதிர்தா முகர்ஜி ஆகியோர் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், சரத் கமல்-மனிகா பத்ரா இணை கலப்பு இரட்டையர் பிரிவிலும் கலந்து கொள்கின்றனர்.

ஒலிம்பிக் போட்டியில் 4-வது முறையாக பங்கேற்கும் சென்னையை சேர்ந்த 39 வயது சரத்கமல் அளித்த பேட்டியில், ‘கொரோனா பரவல் பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது கடினமாகவே இருந்தது. பயணக்கட்டுப்பாடு, சர்வதேச போட்டிகள் ரத்து உள்ளிட்ட விஷயங்களால் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் தினசரி பயிற்சி மற்றும் பயிற்சி முகாம்கள் மூலம் நன்றாக தயாராகி இருக்கிறேன். போட்டிக்கு தயாராகுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிறைய ஆதரவும், ஊக்கமும் அளித்தன. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளால் இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அதிகமான கொண்டாட்டங்கள் இருக்காது. நம்முடைய பாதுகாப்பு மட்டுமின்றி அருகில் உள்ளவர்களின் பாதுகாப்பையும் மனதில் வைத்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். சீனா, ஜப்பான், கொரியா மற்றும் ஜெர்மனி, சுவீடன் வீரர்களை எதிர்கொள்வது எப்போதும் சவாலாகவே இருக்கும். அதேநேரத்தில் தற்போது நமது ஆட்ட தரமும் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் நாங்கள் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதில் 16 இணைகள் மட்டுமே கலந்து கொள்வதால் முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் பதக்கத்தை கைப்பற்றி விடலாம். ஒற்றையர் பிரிவில் நான் (சரத்கமல்), சத்யன் ஆகியோர் நன்றாக தயாராகி இருக்கிறோம். ஒன்றிரண்டு வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தால் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிட்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்