தேசிய ஆணழகன் போட்டியில் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் பட்டம் வென்றார்

தேசிய ஆணழகன் போட்டியில் மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் மிஸ்டர் இந்தியா பட்டத்தை சென்னை சட்டக்கல்லூரி மாணவர் கவுஷிக் ராம் தட்டிப்பறித்தார்.

Update: 2021-08-15 02:18 GMT
சென்னை,

‘ஸ்டார்லைப்’ என்ற அமைப்பு தேசிய அளவில் ஆண்டுதோறும் ஆணழகன் போட்டியை நடத்தி வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான 'இந்திய ஆணழகன்-2021' போட்டியை ஆக்ராவில் நடத்தியது. இந்தியா முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் இறுதி சுற்றுக்கு 100 பேர் தகுதி பெற்றனர். 

முதல் சுற்றில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை சென்னை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவரான கவுஷிக் ராம் தட்டிச்சென்றார். அடுத்ததாக 5 நாட்கள் நடந்த உடல்தகுதி, நடையலங்காரம், நவநாகரீகம், அறிவுசார்ந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்தல் போன்ற வெவ்வேறு திறன் சார்ந்த போட்டிகளிலும் கவுஷிக் ராம் வெற்றி பெற்று 'ஸ்டார் லைப் மிஸ்டர் இந்தியா- 2021' என்ற பட்டத்தையும் தட்டிப்பறித்தார். 

இதன் மூலம் ஒரேநேரத்தில் மிஸ்டர் தமிழ்நாடு மற்றும் மிஸ்டர் இந்தியா பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற சிறப்பை கவுஷிக் ராம் பெற்றுள்ளார். இவரது தந்தை வக்கீல் கணேஷராம். தாயார் பிரபாவதி, சென்னை ஐகோர்ட்டில் அரசு குற்றவியல் வக்கீலாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்