உடல்நலக்குறைவால் பாராட்டுவிழாவில் இருந்து பாதியில் வெளியேறிய நீரஜ் சோப்ரா

உடல்நலக்குறைவால் பாராட்டுவிழாவில் இருந்து பாதியில் வெளியேறிய நீரஜ் சோப்ரா.

Update: 2021-08-18 01:57 GMT
பானிபட்,

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் 23 வயதான நீரஜ் சோப்ரா கடந்த 9-ந்தேதி தாயகம் திரும்பியதில் இருந்து பாராட்டு விழாக்கள், சுதந்திர தின விழா, ஜனாதிபதி, பிரதமரின் விருந்தளிப்பு என்று தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதற்கிடையே, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் மகுடம் சூடிய பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான அரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள காந்த்ரா கிராமத்திற்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பாராட்டு விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். ‘சோர்ந்து போயிருந்த அவருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பும் இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் அருகில் உள்ள வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டதாக வதந்திகள் பரவியது. அது போல் எதுவும் இல்லை. இப்போது நன்றாக இருக்கிறார்’ என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்