உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்

இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

Update: 2023-09-19 19:20 GMT

புதுடெல்லி,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் தனது முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதி சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் (591 புள்ளி) தேசிய சாதனையையும் தகர்த்தார்.

நார்வே வீராங்கனை ஜியானெட்டி ஹிக் டஸ்டாட் 461.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 73 பேர் கலந்து கொண்ட இந்த பந்தயத்தில் மற்ற இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோட்ஜில் 10-வது இடத்துக்கும், ஆயுஷி 35-வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற 16 பேர் கொண்ட இந்திய அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 7-வது இடம் பெற்றது. தங்கப்பதக்கத்தை இளவேனில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் வென்று இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்